search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்ப்பு ஒத்திவைப்பு"

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. #RafaleDeal #RafaleCase
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.



    ரபேல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நிதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, விமானப்படை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று பிற்பகல் உச்சநீதின்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

    ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கெடுத்ததில் இந்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை என்றும், அது டசால்ட் நிறுவனத்தின் முடிவு  என்றும் மத்திய அரசு கூறியது.

    ஆனால், ரபேல் விலை தொடர்பான ரகசியங்களை அரசு மறைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இவ்வாறு தொடர்ந்து காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். #RafaleDeal #RafaleCaseVerdict
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. முருகன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதாடுகையில், நிர்மலாதேவி தான் பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் நீங்கள் சம்மதித்தால் உயர்மட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் இது வேற லெவல் என பேசி உள்ளார்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பதவியில் உள்ள துணைவேந்தர் மற்றும் நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்புடைய மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் மீது ஏன் விசாரனை நடத்தி வழக்குப்பதிவு செய்யவில்லை.

    சாதாரண நிலையில் உள்ள முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு பொய்யான வழக்கை பதிந்து உள்ளது. இந்த வழக்கினை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் வைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பல்கலை கழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

    மேலும், நிர்மலாதேவி, முருகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளனர்.

    எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் ஏற்று கொண்ட நீதிபதி இளந்திரையன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.



    இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.

    அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.

    இந்த வழக்கில் இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி வீட்டிற்கு செல்லும் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #MLAsDisqualificationCase
    டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #SupremeCourt #FireWorks
    புதுடெல்லி:

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தைமார்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக் கல் செய்தனர். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சில இந்து அமைப்புகள் உள்பட சுமார் 100 பேர் இந்த வழக் குக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்தனர்.



    இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக, தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளக்கோரி கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் மூத்த வக்கீல் துருவ் மேத்தா நேற்று தனது இறுதி வாதத்தில், “மத்திய அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அவற்றை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

    மனுதாரர் தரப்பில் வக்கீல் சங்கரநாராயணன், “டெல்லியில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்து வடிவிலான வாதங்களை விரைவில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.  #SupremeCourt #FireWorks 
    ஐதராபாத் நகரில் உணவகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கில் 42 உயிர்களை பறித்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

    இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும்  திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேரும் என மொத்தம் 42 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  

    இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
    திருமணம் ஆன ஆண்-பெண் கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #AdulteryLaw #SupremeCourt
    புதுடெல்லி:

    இத்தாலியில் வசிக்கும் இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

    நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில், “திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவு திருமண பந்தத்தின் புனிதத்தை அழித்துவிடும் என்பதை மனதில் கொண்டு இந்த தண்டனைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற கள்ள உறவு திருமணத்தின் புனிதத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. வெளிநாட்டு கலாசாரத்துடன் இதை தொடர்புபடுத்துவது சரி அல்ல. இது இந்திய சமூக சூழ்நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே இந்த தண்டனை சட்டம் தொடரவேண்டும்” என்று வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள் அமர்வு, பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் இதுபோன்ற உறவு நடந்து அது கள்ள உறவு இல்லை என கூறப்படும் என்றால் திருமணத்தின் புனிதம் என்னவாகும்? இது பொதுவில் நல்லதுதானா? என்று கருத்து தெரிவித்தது.

    இந்த வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #AdulteryLaw #SupremeCourt  #tamilnews 
    குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. #GutkaScam
    புதுடெல்லி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 26-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

    சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் என்பவர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தில் கூறியதாவது:-

    மனுதாரர் எந்தவகையிலும் குற்றவாளி கிடையாது. அவரை விசாரிக்காமலேயே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்த உத்தரவு சட்டவிரோதமானது.

    மேலும் ஏற்கனவே தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு எதிராக குட்கா விவகாரத்தை சம்பந்தப்படுத்தி அவருடைய பதவி உயர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சு, குட்கா விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை குழுவை அமைத்து விசாரணை செய்வதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

    எனவே, சென்னை ஐகோர்ட்டின் தற்போதைய இந்த தீர்ப்பு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன் தனது வாதத்தில் கூறியதாவது:-

    இது ஒரு மாநிலத்தின் அமைச்சர், மூத்த அதிகாரிகள் தொடர்புடைய வழக்கு. இந்த வழக்கில் ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. மாநில அரசு அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய அரசு அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

    வருமான வரித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்பே காணவில்லை என்று கூறுகிறார்கள். இதில் கூட்டு சதி உள்ளது.

    இந்த வழக்கின் மனுதாரர் ஒரு சாதாரண அரசு அதிகாரி. ஆனால் அவருடைய வழக்கை வாதாடுவதற்கு முன்னாள் அட்டார்னி ஜெனரலை நியமிப்பதற்கான வசதி அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை எல்லாம் பார்க்கவேண்டும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  #GutkaScam
    ×